குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Saturday, June 14, 2014

ஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....

தோழர்  "ரைட்டர் நாகா" அவர்களுக்கு வணக்கம்,

தங்களின் இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிகுந்த "ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்" என்ற தங்கள் புத்தகத்தின் முதல் பிரதியைப்  படித்தேன். தங்கள் எழுத்துக்களிலுள்ள உயிரோட்டத்தைப் பார்த்த அந்த நொடியில் அகம் மகிழ்ந்தேன். அதனால் சுயம் தொலைத்தேன். தங்களை நான் ஒரு முறை கூட பார்த்ததில்லை ஆனாலும்   தங்களுக்கு நான்கைந்து முறை தொலையாடிப் பேசியிருக்கிறேன். தங்களின் மெதுவான பேச்சு, பேச்சிலுள்ள லாவகம், பேச்சினூடே தாங்கள் இலைமறை காயாக சொல்லும் தகவல்கள் போன்றவற்றை கேட்ட மாத்திரத்திலே "மொழி" திரைப்படத்தில் மண்டையில் மணி அடிப்பது போன்று  எனக்கும் ஒரு சத்தம் கேட்டது. மிக அருமையான சத்தம் உன்னித்து என் சிந்தையை கூர்மையாக்கி கேட்டதில் அந்த சத்தம் சில நொடிகள் ஒப்பாரி சத்தம் போலவும், சில நொடிகள்  பறை கொண்டடிக்கும்  சாவு மேளம் போலவும், பிகர்களுடன் கடலை போட்டுக்கொண்டிருக்கையில் இடையினூடே வரும் ஆன்டிகளின் கிராஸ் டாக் போலவும் தெளிவில்லாமல் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போதே நான் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டேன் தங்கள் மிக விரைவில் மிகச்சிறந்த எழுத்தாளனாகி ரைட்டர் ஆவீர்கள் என்று. ஞானிகள் சொல் பலிக்காமல் போகாது என்பார்கள்.

கடந்த சில காலங்களாக தங்களிடம் சரிவர தொலைபேச முடியவில்லை. தங்களைத் தொடர்பு கொள்ள நான் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தோல்வியிலேயே வெற்றிகரமாக முடிந்தன. அப்பொழுது தான் நான் தாங்கள் தங்களைச் செம்மையாக்கி, சீர்படுத்தி, சிகையலங்காரம் செய்து ஒரு சிறந்த எழுத்தாளர் என்று சொல்லும் ரைட்டர் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கலாம் என்று என்னை அறியாமல் எண்ணிக்கொண்டேன். ஒரு வேளை அக்காலகட்டத்தில் தங்களை நான் தொந்தரவு செய்திருந்தால் தாங்கள் எழுத்தாளர் என்று சொல்லக்கூடிய ரைட்டர் ஆக முடியாமல் போயிருக்கலாம். எந்திரன் படத்தில் வரும் ரஜினி  ஐஸையும் மறந்து வசீகரன் என்ற ரோபோ ரஜினியை குளோனிங் செய்து உருவாக்கியது போன்று தாங்கள் அனைவரையும் மறந்து ஆற்றங்கரை, குளத்தங்கரை, மகளிர் கல்லூரிகள் மற்றும் மகளிர் விடுதிவாசல்கள் போன்ற இடங்களில் காத்திருந்து அனைத்தையும், அனைவரையும்  மறந்து எழுத்தாளர் ஆவதற்கு தாங்கள் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் முயற்சிகள், உழைப்புகள் போன்றவற்றை நான் கேள்விப்பட்ட வேளையில் உள்ளம் உடைந்து வெந்து வெம்பிப்போனேன் தோழரே. 

இப்படி வெம்பிப்போன மனதுடன் தும்பிகளை துணைக்கழைத்து கொஞ்சிக் குலாவி கொண்டிருந்த நல்லதொரு வேளையில், பொழுதினில், நேரத்தில் சமயத்தில் தான் தாங்கள் எழுதிய இலக்கிய செறிவு வாய்ந்த படைப்பைப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்தில் தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற எண்ணம் என் மனதில் ஒரு மின்னல் போல வந்து மறைந்தது என்பதை நான் இங்கே சொல்லிக்கொள்ள வெட்கப்படவோ வேதனைப்படவோ வருத்தப்படவோ இல்லை. 

இனி தங்கள் இலக்கிய செறிவு மிகுந்த "ஊரெல்லாம் ஒரே கோலம் எங்க ஊட்ல மட்டும் கந்தர கோலம்" புத்தகத்திற்கு  வருவோம்..

தோழரே தங்கள் நூலின் முதல் வரியையே "அங்கிங்கெனாதபடி" என்று ஆரம்பித்தது தான் எனக்கு  அளப்பரிய ஆச்சர்யத்தையும் வியப்பையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. இப்படி ஆரம்பிக்க வேண்டுமென்றால் தாங்கள்  சாயங்காலம், மழைக்காலம், வெயில்காலம் போன்ற எத்தனை விதமான காலங்களிலுள்ள ஏடுகளையும் கல்வெட்டுகளையும் புத்தகங்களையும் இணைய பக்கங்களையும் புரட்டியிருப்பீர்க்ள என்பதை நினைத்தாலே எனக்கு மயக்கம் வந்துவிடும் போலிருக்கிறது. ஆகையால் கொஞ்சம் பொறுத்திருங்கள் தோழரே நீர் அருந்திவிட்டு வருகிறேன். 

நிற்க...

மீண்டும் வருவோம் முதல் வரிக்கே... தங்கள் கட்டுரையின் முதல் வரியிலையே நான் பார்த்த மாத்திரத்தில வாய்திறந்து சுவாசிக்க வைத்த இன்னொரு விஷயம் ஊழல் என்ற வரத்தை தான். சம கால இலக்கியத்தை தாங்கள் ஒரு கோப்பை டம்ளரில் அடக்கி வைத்திருக்கும் தாங்கள் சமகால அரசியலையும் அதில் இரண்டறக்கலந்த ஊழல் பற்றி தெரிய வேண்டுமானால் தாங்கள் அரசியலில் எத்தனை பழங்களை தின்று கோட்டை போட்டிருப்பீர்கள் என்று நினைக்கும் போது எனக்கு விழி பிதுங்குகிறது. 

அடுத்தடுத்த வரிகளை பற்றி எனக்கு என்னசொல்வது என்றே தெரியவில்லை தோழரே. புத்தகத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் வரும்  உணவு, உடை, இருப்பிடம் என்பன பற்றிய விளக்கங்களையும் அவற்றை தாங்கள் கையாண்ட விதத்தையும்  படிக்கும் போது தங்களின் வாரிக்கொடுக்கும் வள்ளல் குணம் எனக்கு தெரியவந்தது. அதற்கடுத்த வரிகளில் தாங்கள் எழுதியிருக்கும் சிலவார்த்தைகளை பார்க்கும் போது யாரையோ கன்னாபின்னாவென்று திட்டுவது போன்று தோன்றியது, அதுவே எனக்கு தங்கள் மிகவும் கோபக்காரர் என்பதையும் சொல்லாமல் சொல்லிற்று. 

அதற்கு பிந்தைய வரிகளை எவ்வளவு தரம் வாசித்தும் என் சிறு மூளையின் ஒரு மூலைக்கு கூட எதுவும் பிடிபடவில்லை. தமிழ் போன்ற சாயலில் வேற்று மொழிகள் கலந்து எழுதலாம் என்பதையும் அங்கு தான் நான் தெரிந்து கொண்டேன். எனக்கு எஸ்பாநெல் மொழியில் எழுதும் ஒரு தோழரை நன்றாகத் தெரியும். அவரின் எழுத்துக்களை படித்துப் படித்து தற்போது சிறிதளவு எஸ்பாநெல் மொழிக் கட்டுரைகள் என்னால் படிக்க முடிகிறது. ஆனால் தங்களின் இந்த கட்டுரையின் பிந்தைய பகுதிகளை  நான் இதுவரையில் கேள்விப்படாத ஒரு மொழியில் தான் கண்டிப்பாக எழுதியிருக்க வேண்டும் என்பது எனது அனுமானம். இவற்றை எல்லாம் பார்த்தால் நாம் என்ன மாதிரியான சூழலில் வாழ்கிறோம் என்ற எண்ணம் அடிக்கடி வந்து போவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.  ஆகையால்  அமேசான் காடுகளில் மட்டுமே வசிக்ககூடிய அறிஞரும் புலவருமான  "எவரோமார்டினோ" என்ற மகானுக்கு தங்கள் புத்தகத்தை ஆராய்ச்சிக்கு அனுப்பலாம் என்று  ஒரு மனதுடன் முடிவு செய்திருக்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயத்தை பற்றி நான் இங்கே சொல்லியே ஆகவேண்டும். தற்கால எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு தான் தன் சக எழுத்தாளர்களையும் அவர்களின் படைப்புகளையும் பற்றி புகழ்ந்து பேச மனது வரும். அந்த விசயத்தில் தாங்கள் மாமனிதர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் ஐயா. கடந்த நூற்றாண்டில இளையர்கள் மனதில் நீங்காமல் இடம்பிடித்திருந்த "சரோஜாதேவி" வகை புத்தகங்களையும் அவற்றின் தரத்தை பற்றியும் அவற்றால் தாங்களடைந்த பயனைப்பற்றியும், அதை எழுதிய எழுத்தாளர்களை பற்றியும் தாங்கள் சிலாகித்து எழுதியிருப்பதைப் பார்த்த போது தான் தங்களின் வாசிப்பு திறனையும், அதோடு நின்று விடாமல் அந்நூலின் ஆசிரியர்களை பாராட்டிய உயர்ந்த எண்ணத்தையும் அறிந்து கொண்டேன். 

இவற்றையெல்லாம் வைத்து பக்கத்து அப்பார்ட்மெண்டில் ஆண்டடிகளை சைட்டு அடிக்கும் தொலை நோக்கு பார்வையுடன் கொஞ்சம் தூரமாக நின்று பார்த்தால் தாங்கள் ஒரு மிகச்சிறந்த எழுத்தாளர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் வருவதேயில்லை. 

மன்னிக்கவும்  தோழரே  தங்களை பற்றியும், தங்களின் எழுத்துக்களைப் பற்றியும் இன்னும் எவ்வளவோ சொல்லவேண்டும் போல தான் தோன்றுகிறது ஆனால் தங்களின் அந்த இலக்கிய செறிவும், அடர்த்தியும் மிக்க புத்தகத்தை  பற்றி யோசிக்கும் தருவாயில் கூடவே கொலை மற்றும் தற்கொலை செய்யும் எண்ணங்களும் வந்து தொலைக்கின்றன ஆகையால் என் உயிருக்கு பயந்து நான் இந்த புலம்பலை இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.  

"மீண்டும் சந்திக்க முயற்ச்சிக்கிறேன்"
நன்றி. 
ஜெயந்த் கிருஷ்ணா,
சிங்கப்பூர்.

Tuesday, February 11, 2014

காதலோ தினம்?

அது என்னவோ நம்மாளுகளுக்கு வருஷத்துல மார்கழி மாசத்தில் நாய்களுக்கு வர்ற மாதிரி பிப்ரவரி மாசமான  காதல் மானாவாரியா பெருக்கெடுத்து ஓடுது. லெட்டர்ங்கிறாங்க, கலர் கலரா டிரஸ் போட்டு டிரஸ் கொடுங்கிறாங்க. அட அதுல தான் இந்தப் பச்சைக் கலரை விடுறாங்களா, அதையே வருஷா வருஷம் போடச் சொல்லி டார்ச்சர் பன்றாங்க.

ஊர்ல இருக்கிற ஆயிரத்தெட்டு புள்ளைகளுக்கும் நூல் விட்டு எதுவும் செட்டாகம அயலூர்ல போயி ஏதோ வத்தலோ தொத்தலோ பிக்கப் பண்ணிட்டு உள்ளூர்ல பச்சை சட்டையைப் போட்டுட்டு இங்கயும் ஏதாவது தேறுமான்னு சுத்தறவங்க தானே அம்புட்டு பேரும். அட இவங்கள விடுங்க, ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் கையும் களவுமா காதலனோட புடிச்சிருப்போம், அப்பக்கூட பச்சைக்கலர் டிரஸ்ஸ துவைக்காமல் கூட போட்டுட்டு திரியுதுக இந்தப் பொண்ணுக.

அப்புறம் இந்தக் கிரீட்டிங்க்ஸ் கார்டு. அதைக் கண்டுபிடிச்சவன் மட்டும் கைல சிக்குனா அவ்ளோ தான். என்னவளேன்னு ஆரம்பிச்சி ஆயிரத்தெட்டு என்டர் தட்டி மொக்கையா ஒரு கவிதை. அதுக்கு கீழே உயிரே போனாலும் உன்னைவிட்டுப் போகாத - காதலன் XXXXன்னு ஒரு கையெழுத்து. அட இதாவது பரவால்ல தமிழ் கவிதை பொறுத்துக்கலாம். சில கைரேகை பார்ட்டிக இங்க்லீஷ் கவிதை இருக்கிற கார்டா பார்த்துத் தான் வாங்கிக் கொடுப்பாங்களாம். அதுல என்ன எழுதி இருக்குன்னு கொடுக்கிற பார்ட்டிக்கும் தெரியாது, வாங்குற அட்டுப் பீஸுக்கும் தெரியாது. நல்லவேளை, இன்டர்நெட் வந்தது. இப்பெல்லாம் மெயில்ல, ட்விட்டர்ல, பேஸ்புக்லன்னு கிரீட்டிங்க்ஸ் கார்டோ கவிதையோ அனுப்பி காசை மிச்சம் புடிக்கிறாங்க.

அப்புறம், நம்ம கலாச்சாரக் காதலர்கள் ஸாரி காவலர்கள். அன்னைக்கு மட்டும் ஆபீஸுக்கு டாஸ்மாக்குக்கு எல்லாம் லீவைப் போட்டுட்டு வீதிவீதியா சுத்திட்டு திரிவாங்க. அதுல பார்த்தீங்கன்னா அந்தப் பார்ட்டிக எல்லாம் ஒருகாலத்துல லவ் பண்ண டிரை பண்ணி செட்டாகம பொலம்பிய கேஸுகளாகத்தான் இருக்கும்.

இவ்ளோ சொல்லியும் ஒண்ணை சொல்லலன்னா மனசு ஆறாது. நான் இன்னை வரைக்கும் காதலர் தினம் கொண்டாடியதே இல்லீங்க. அந்த நாள் மட்டும் லீவைப் போட்டுட்டு வீட்ல தூங்கிடுவேன். ஏன்னா ஊர்ல நமக்கு ரசிகைகள் ஜாஸ்திங்க. எத்தனை பேர் லவ்வுக்குத்தான் நாம வாழ்க்கை கொடுக்கிறது? ;)

Friday, January 24, 2014

புத்தகக் கண்காட்சியும் சமகால எழுத்தாளர்களும்!

என்னோட ஆகச் சிறந்த ஆக்கமான "கந்தரகோலம்" வருவதற்கு முன் இன்னொரு பொஸ்தவம் போடலாம் என இருக்கிறேன். புத்தகக் கண்காட்சி முன்னிட்டு இந்த வளரும்/இளம்/சின்ன/புதிய/பழைய/பெரிய எழுத்தாளர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்தே இந்த முடிவு எடுத்துள்ளேன்.

அது என்னான்னா,
எழுத்தாளர் ஆவது எப்படி?
முப்பது நாளில் நீங்களும் எழுத்தாளரே!
இலக்கணப் பிழைகளைத் தவிர்ப்பது எப்படி?
துக்கம் தொண்டையை அடைப்பதை களைவது எப்படி?
அடுத்த வருடம் நீங்களும் இலக்கியவாதியே!
இலக்கிய நோபல் பரிசும்,புலிட்சர் பரிசும் உங்களுக்கே!
இந்தப் புக்கை எழுதாதீர்கள்!
எழுத்தாளருக்கு தன்னம்பிக்கை தரும் ஆயிரம் பொன்மொழிகள்
நீயும் என்னைப் போன்ற எழுத்தாளனே - மோனிகா லெவின்ஸ்கீயின் மொழிபெயர்ப்பு கட்டுரைகள்

அடுத்து,

பதிப்பகம் ஆரம்பிக்க ஆயிரம் ஐடியாக்கள்
பதிப்பாளாராவது எப்படி?
பதிப்பகம் - அலசல்கள்
நூலக ஆர்டர்கள் பெறுவது எப்படி?
பதிப்பாளரும் ராயல்டி பிரச்சினைகளும்
எழுத்தாளருடன் ராயல்டி போடுவது எப்படி?
பதிப்பக ஆடிட்டிங்
முப்பது நாளில் பிரிண்டிங் கற்பது எப்படி?




நாவலோ, கட்டுரையோ, கவிதையோ அல்லது சிறுகதையோ எழுதுவது அவ்வளவு கஷ்டமில்லை. எப்படி எழுத வேண்டும் என்பதை ஏற்கனவே நிறையப் பேர் சொல்லிவிட்டபடியால், இப்போதைய எழுத்தாளர்கள் முன்னுரை மற்றும் சமர்ப்பணம் போன்ற முக்கிய பகுதிகளை எழுதுவதில் கோட்டை விடுகின்றனர். எனவே

முப்பது நாளில் முன்னுரை எழுதுவது எப்படி?
உங்கள் நூலை சமர்ப்பணம் செய்வது எப்படி?
பின்னட்டைக்கு போஸ் கொடுப்பது எப்படி?

இருக்கும் கொஞ்ச நஞ்ச வாசகர்களும் இந்தப் புத்தகங்களை வாங்கி அடுத்த வருடத்திற்குள் நீங்களும் ஒரு புத்தகமோ, பதிப்பகமோ ஆரம்பித்து சமகால இலக்கியவாதிகளுக்கு போட்டியாய் படைப்பை உருவாக்க வேண்டும் என விரும்புகிறேன்.