குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Sunday, December 23, 2012

நீ.எ.பொ.வசந்தமும் பீட்டர் மேனனும்

உலகப் படங்கள் தவிர்த்த மற்ற படங்களைப் பார்த்து மாமாங்கம் ஆகிவிட்ட படியால் ஒரு தமிழ்ப் படத்தை பார்க்க மூன்று மணி நேரம் செலவிட வேண்டுமா என்ற யோசனையில் இருந்தேன். இணையத்தில் கொட்டிக் கிடந்த  விமர்சனங்களில் நீ தானே என் பொன் வசந்தம் ஓர் ஆங்கிலப் படமே என விளக்கியிருந்தனர். மின்னலே, காக்க காக்க தவிர்த்த மற்ற பீட்டர் மேனன் படங்களை தமிழ் சப்-டைட்டில் பிரச்சினையால் பார்க்காமல் இருந்தேன். இருப்பினும் பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களின் சில காட்சிகள்/பாடல்களை டிவியில் பார்த்திருந்தேன்.

படம் ஆரம்பிக்கும் போது ஒரு சந்தேகம் வந்தது, ஹீரோ யார், ஜீவாவா இல்லை சந்தானமா என! முதல் பாடல் முடிந்ததும் ஆரம்பித்தது ஏழரை. நான் ஆங்கிலம் முதற்கொண்ட பிற மொழிப் படங்களை சப்-டைட்டிலுடன் பார்த்தே பழக்கப்பட்டவன். எனக்கு இந்தப் படத்தில் பேசும் வசனங்கள் சுத்தமாகப் புரியவில்லை. அட நீங்க வேற 90களில் வளரும் குழந்தைகள்கூட ஆங்கிலத்தில் தான் கதைக்குமென காட்டியிருந்தார். அப்புறம் ஜீவா ஃபேமிலி. ஒரு சீனில் லாங் ஷாட்டில் ஜீவா தவிர்த்து மூன்று பேரைக் காட்டுகிறார்கள். அவர்கள் அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் தம்பி என்பதை படத்தின் பின் பகுதியில் விளக்குகிறார் இயக்குனர். இது Non-linear படமோ என்ற சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்தியது. அடுத்தடுத்து வந்த காட்சிகள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லி என் நெஞ்சில் பாலை வார்த்தார்.



படத்தில் ஜீவாவின் அப்பா பேசும் மொத்தம் பத்து வார்த்தைகளும் ஏதோ ஒரு மெகாத் தொடரில் இருந்து சுட்டவை. அது எந்தத் தொடர் என்று தெரிந்தவர்கள் சொன்னால் தன்யனாவேன். அடுத்து சுய எள்ளலில் இயக்குனர் சளைத்தவர் இல்லை என்பதை நிருபிக்க சந்தானத்தின் காதல் காட்சி. அடுத்து சுனாமி மறுசீரமைப்புக்கு செல்லும் ஒரு ஆசிரியை ஆங்கிலத்தில் மட்டுமே பாடம் நடத்துகிறார் என்ற காட்சியில் மணப்பாடு தமிழனின் ஆங்கிலப் புலமை கண்டு வியந்து சீட்டை விட்டே எழுந்து நின்றுவிட்டேன்.

ஆக மொத்தமாய் படத்தில் கதை என இயக்குனர் சொல்ல வருவது, தோரயமாய் ஏழு எட்டு வயதில் தோழியுடன் நட்புக் கொண்டிருந்தால் அது காதலாப் பரிணமிக்கும் வாய்ப்பு அதிகம். அந்தக் காதலை பத்தாவதிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு ஏதோ ஒரு இடத்தில் மீட்டெடுத்து தூசி தட்டி திரும்பவும் கொண்டு வந்து அதன்பின் பிரிந்து, அதற்குப்பின் கல்லூரிக் காலத்தில் ஏதோ ஒரு போட்டியில் திரும்பவும் தோழியைச் சந்தித்து திரும்பவும் காதலாகி கண்ணீர் மல்கவெல்லாம் இல்லை, அப்புறம் திடீரென நல்லவனாகி மறுபடியும் தோழியுடன் சண்டை போட்டு படித்து வேலைக்குப் போய் அம்மா-அப்பாவை ஃபாரின் டூர் அனுப்பி, வீட்டில் ஃஷோபா செட் மாற்றி, மணப்பாடு போய் அவளுடன் திரும்ப சண்டை போட்டு, வேறொரு பெண்ணுடன் நிச்சயமாகி அப்புறம் காதலியைக் கைப் பிடிப்பதுதான். ஜீவா அளவுக்கு உங்களுக்குப் பொறுமை இருக்குமா எனத் தெரியவில்லை. எனவே உங்களுக்குத் தோழி இருந்தால் இப்பவே நட்பைத் துண்டித்து விடுங்கள். 

படத்தில் சிறப்பு அம்சம் எனப் பார்த்தால் சமந்தாவின் இயல்பான நடிப்பு. அடுத்து முக்கியமாய் இசை. இசைஞானி தவிர்த்து இசைக்கடல், சூறாவளி என  யார் இசை அமைத்து இருந்தாலும் இந்த அளவிற்குக்கூட படம் ஓடியிருக்குமா எனத் தெரியவில்லை. படத்தின் பல இடங்களில் இசையே ஓட்டிச் செல்கிறது.  தன் எல்லாப் படங்களிலும் தலை காட்டும் பீட்டர் மேனன், இதில் அந்தத் தவறைச் செய்யவில்லை போலும், ஆனால் அதற்குப் பதில் ஒரு பாடலைப் பாடியிருந்தார். மற்றவர்கள் போல அவர் விளம்பரப் பிரியர் இல்லை என்பது இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் என அவர் பெயர் போடாமல் இருந்ததிலிருந்தே தெரிந்தது.


இயக்குனர் ஆங்கிலப் படங்களை பார்த்து காட்சிகளை அமைப்பதைக் கொஞ்சமேனும் குறைக்கலாம். மிஸ்டர் பீட்டர் மேனன், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..


Friday, September 7, 2012

அவளும் அவனும் பின்னே ரைட்டர் நாகாவும்!


அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஊழலைப் போல அவன் மனது முழுதும் அவள் நினைவு, இன்று எப்படியாவது அவளைப் பார்த்து விட வேண்டுமென காலையிலிருந்து உணவு, உடை, இருப்பிடம் என அனைத்தையும் மறந்து தவம் கிடந்தான் அவன், அவனைப்பற்றி ஒரே வரியில் சொல்ல முடியாது, அவனைப் புரிந்து கொண்டவர்கள் அவனையும் தவிர்த்து அவன் வீட்டு நாய் மட்டுமே!  கூதிர்  காலத்தில் குளிப்பான், கோடையில் குளிப்பதை மறப்பான், பகலில் நட்சத்திரங்களை எண்ணுவான், இரவினில் சூரியனைத் தேடுவான், சினிமாவில் ஆக்‌ஷன் காட்சிகளை ரசித்துப் பார்ப்பான், மிஷ்கின் படத்தில் டிரிபூட் தேடுவான், கமல் படத்தில் ஆபாசம் எதிர்ப்பான், மொத்தத்தில் தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பான்.



நாவலில் செண்டிமெண்ட் காட்சிகள் வந்தால் அழுவான், பின்நவீனத்துவத்திலிருந்து கட்டற்ற களஞ்சியமான விக்கீபீடியா வரை கரைத்துக் குடித்தவன், எப்போவதாவது குடிக்க மாட்டான், குடித்துவிட்டு தத்துவமோ கவிதையோ சொல்லமாட்டான், கள்ளையும் சாராயத்தையும் கலந்து குடித்து கலெக்டரைப் பார்க்க வேண்டுமென்பான், குடிக்கும் வரை தமிழனாய் இருந்துவிட்டு குடித்தபின் ஃபிரெஞ்ச்சோ, இலத்தீனோ சரளமாய் பேசுவான், குடித்த பின் இலக்கியம் பேசமாட்டான், குடிக்காமல் பேசவே மாட்டான்.


எதைப் பற்றியும் கவலைப் படமாட்டான், ஆனால் சில நேரம் ஓரமாய் ஊறும் எறும்பைக் கூட காப்பாற்றி அதன் வீட்டில் விடவேண்டுமென்பான்.,மொத்தத்தில் அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் புரியாத புதிர், அவனுடைய இலக்கிய நண்பர்களுக்கு அவன் ஊறுகாய் அவர்களின் போதைக்கு, இப்படியாய் நாளொரு புத்தகமும் பொழுதொரு குடியுமாய் போன அவனது வாழ்க்கையில் ஒரு புதினமாய் வந்தால் அவள். இவன் படிக்கும் நூலகத்தில் அவள் நூலகர், மின்னல் சிரிப்பு, கன்னக் கதுப்பு என அவளை பார்த்ததும் மயங்கினான், அவனிடம் இது வரை இல்லாத மனிதக் காதல் சுரப்பிகள் சுரக்கத் தொடங்கின.


அவளுக்காக முடி வெட்டினான்,  குளித்தான், தலை வாரினான், தமிழின் டாப்பர் ஹீரோ போல உடை அணிந்தான், காலையில் குடிப்பதை நிறுத்தினான். அவளிடம் இலக்கியம் பேசினான், பேசியதிலிருந்து அவளுக்கு பின்நவீனத்துவமும் கவிதையும் பிடிக்கும் என்று அவனுக்குத் தெரிந்தது. உடனே அவனுக்குள் இருந்த பாப்லோ நெரூடா விழித்துக் கொண்டான். அவளுக்காக ஒரு பின்நவீனத்துவ கவிதை இரண்டு வாரமாய் எழுதி இரண்டு நாட்களுக்கு முன் கொடுத்தான். அதை வாங்கியதிலிருந்து அவள் இரண்டு நாள் வராததால் இப்போது தவம் கிடக்கிறான்.


அவள் வருவது தூரத்தில் தெரிந்ததால் அவன் எழுந்து தலையை சரி செய்தான். அவள் அவனை நெருங்கி அழகாய் சிரித்து அவனிடம் ஏன் "ரைட்டர் நாகா" கவிதையை காப்பியடிச்சே என்றாள்..

பின்குறிப்பு:

கொஞ்சநாள் முன்னாடி டெர்ரர் கும்மியில் வெளியான எனது கட்டுரை, சில மாற்றங்களுடன்..

படங்கள் உதவி: கூகிள் இமேஜஸ்

Tuesday, August 21, 2012

பெட்ரோல் பங்கில் கொள்ளை - தொழிலாளர்களின் அராஜகம்


இரு சக்கரமோ, நான்கு சக்கரமோ பொருத்திய ஏதாவது ஒரு வண்டி வாங்கி அதை இயக்குவதே பெரும்பாடாகிப் போன தற்காலத்தில், ஒரு வாகன ஓட்டி/வாகன உரிமையாளர் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது. திருப்பங்களில் நின்றிருக்கும் பிள்ளையார் கோவில்கள் முதல் சாலையை எந்த பிரக்ஞையின்றி கடக்கும் மாடுகள், எருமை மாடுகள், பன்றிகள், சில சமயம் மனித உருவில் இருக்கும் மாக்கள், அதிவேகத்தில் வாகனத்தை ஒட்டி வந்து முந்திச் செல்பவர்கள், காதடைக்க ஒலியெழுப்பும் புகைபோக்கி கொண்டவர்கள், சாலையை தனது தாத்தா வீட்டு சொத்தாய் பாவித்து வாகனம் இயக்கும் அன்பர்கள், இறுதியாய் அங்கிங்கு எனாதபடி எங்கும் நிற்கும் காவல்துறை நண்பர்கள் வரை நிறைந்தது சென்னையில் இருக்கும் கரடுமுரடான சாலைகள்.

நிற்க, நான் இங்கே சொல்ல வந்தது சென்னை சாலைகளைப் பற்றியல்ல. சென்னையில் இருக்கும் அநேக பெட்ரோல் பங்குகளில் நடக்கும் பகல் கொள்ளைகளைப் பற்றி. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் அளவு சரியாய் இருக்காது, விலையேற்ற நாட்களில் பெட்ரோல் ஸ்டாக் இருக்காது போன்ற முதலாளித்துவ பிரச்சினைகளை விட்டுத் தள்ளுங்கள். அதற்காய் நாம் போராடி நம் ஜனநாயக நாட்டில் வெற்றி பெற முடியாது. பின் வேறு என்ன பிரச்சனை என்கிறீர்களா? நான் மட்டுமல்ல என் நண்பர்கள் பலரும் எதிர் கொண்ட பிரச்சினைகள் பின்வருமாறு.




அ). நீங்கள் பெட்ரோல் பங்க் பம்ப்பின் முன் உங்கள் வண்டியை நிறுத்தி, இவ்வளவு பெட்ரோல் போட வேண்டும் என்று அங்கிருக்கும் அன்பரிடம் சொல்கிறீர்கள். அவரும் ஆமோதித்து, அந்த பம்ப் கைப்பிடியை உங்கள் வண்டி டேங்க்கின் மீது வைத்து இயக்கி, பின் திடீரென்று நிறுத்தி விடுவார். அப்போது அளவு காட்டி ரூ. 50/- காட்டிக் கொண்டிருக்கும். அவரிடம் நான் இவ்வளவு ரூபாய்க்கு/லிட்டர் போடச் சொன்னேன், ஏன் ஐம்பது ரூபாய்ல நிறுத்திட்டீங்கன்னு கேட்டால், அப்படியா என்று ஆச்சர்யப் பட்டுக் கொண்டு திரும்பவும் தொடருவார். நீங்கள் அதன் தொடக்க அளவை கவனித்து இருக்க மாட்டீர்கள். அந்த ரூ. 50/- முன்னாடியே இயக்கியது/இவர்களாக செட் செய்வது. இப்போது நீங்கள் ஐம்பது ரூபாய்க்கான பெட்ரோலை இழந்து விட்டீர்கள்.

ஆ). அடுத்த பிரச்சினை, இரண்டு அன்பர்கள் அங்கே இருப்பார்கள். ஒருவர் அந்த பம்ப்பின் கைப்பிடியை வைத்திருப்பார். மற்றவர் உங்களிடம் பணம் வாங்கும் காசாளர். நீங்கள் இவ்வளவு அமவுண்ட்/லிட்டர் பெட்ரோல் என்று சொல்லிய பின், அந்தக் காசாளர் உங்களிடம் பேச்சுக் கொடுப்பார். வண்டி நல்லா இருக்கே, எப்போ சார் சர்வீஸ் செஞ்சீங்க. நீங்கள் அவரிடம் பதில் சொல்லி முடிக்கும் போது உங்களுக்கான பெட்ரோல் போடப் பட்டிருக்கும். இப்போது உங்களுக்கு எவ்வளவு பெட்ரோல் போடப்பட்டது என்பது அந்த சிபிஐயால் கூட கண்டுபிடிக்க முடியாது.

இ). காற்று இலவசம் என்று எல்லாப் பங்க்குகளிலும் ஒட்டி இருக்கும். ஆனால் காற்றுப் பிடிக்கும் அன்பருக்கு காசு தராமல் காற்றுப் பிடித்துப் பாருங்கள், சென்னையில் இருக்கும் அனைத்து கெட்ட வார்த்தைகளாலும் அர்ச்சனை செய்யப்படுவீர்கள். அதிலும் ஓர் அற்ப சந்தோசம், உங்களுக்கு தமிழில் அர்ச்சனை கிடைப்பது என்பதே!

இந்தப் பிரச்சனைகளை தவிர்க்க சிறந்த வழி, நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பதே! இதை எதிர்த்துப் போராடினால் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கிறார்கள் என்று நம்மையே தான் திட்டுவார்கள். 

  • எப்போதும் தொடக்க அளவு பூஜ்ஜியத்தில் இருக்கிறதா என்று கவனிக்கவும்.
  • தேவையற்ற பேச்சுக்களில் கவனம் செலுத்த வேண்டாம்.
  • பெட்ரோல் போடும் கைப்பிடி மீதிருந்து கையை எடுக்கச் சொல்லவும்.
  • காற்றுக்கு காசு கேட்பின், மேலாளரிடம் புகார் கொடுக்கவும். அவர் இல்லையெனில் வேறு எதுவும் செய்ய இயலாது.
பி.கு.: இந்தப் பதிவுக்கான தலைப்பை வைக்க அண்ணாந்து விட்டத்தைப் பார்த்து நெடுநேரம் யோசித்தேன். எதுவும் பிடிபடவில்லை. கண நேரத்தில் உதித்த சிந்தனையாய் "அந்த" வெப்சைட்டுக்கு சென்றதும், கிடைத்ததே இந்தத் தலைப்பு.

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த HuntForHint இன்னும் சில தினங்களில்!

படங்கள் உதவி: கூகிள் இமேஜஸ்

Wednesday, February 1, 2012

ஆனந்த தொல்லை


ஊருக்கு வடக்கு ஓரத்தில் அமைந்திருந்த அம்மன் சன்னிதிக்கு நிழல் வழங்கி, தனக்கு கீழ் புற்களைக் கூட முளைக்க விடாத அளவு அடர்ந்து வளர்ந்திருந்த ஆல மரத்தின் அடியில் ஊர் மக்கள் அனைவரும் கூடியிருந்தனர். நேற்று பிறந்த குழந்தையிலிருந்து இன்னைக்கோ நாளைக்கோ என இருக்கிற பெருசுகள் வரை அந்தக் கூட்டத்தில் அடக்கம். எல்லோருடைய முகத்திலும் பயம், பீதி மற்றும் கவலை ரேகைகள். தானே புயலின் வீச்சையும் அணிலின் நடிப்பையும் கேப்டனின் அறிக்கைகளையும் தாங்கியவர்கள் தான் அந்த கிராமத்து மக்கள். ஆனால் அவர்களாலேயே தாங்க முடியாத அளவில் பேரழிவாக பவர் ஸ்டாரின் ஆனந்த தொல்லை அவர்களை நோக்கி வருவது தெரிந்து அடுத்து என்ன செய்யலாம் என முடிவெடுக்கவே அங்கே திரண்டிருந்தனர்.



ஆனந்த தொல்லை எப்போது வரும் எப்படி வரும் எனத் தமிழ் நாட்டில் யாராலும் யூகிக்க முடியவில்லை. ஆனால் அந்தக் கிராமத்துக்கு அருகில் இருக்கும் சினிமா தியேட்டர் ஓனர் நம் பவர் ஸ்டாரின் நெருங்கிய நண்பராம். அவர் மற்ற இடங்களில் ஆனந்த தொல்லை ரிலீஸ் ஆகும் முன்பே இங்கே ரிலீஸ் செய்யப் போவதாக ரகசியத் தகவலை வெளியே கசிய விட்டுள்ளாராம். எல்லோருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியமாய் இருக்கும் என்று அதிமேதாவித்தனமாய் யாரும் கேட்காமல் எல்லோரும் அமைதி காத்து நாட்டாமை முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். 

நாட்டாமையாகப்பட்டவர், டிப்பிகல் தமிழ் சினிமாவில் வரும் நாட்டாமை போலில்லாமல் சட்டை அணிந்து வெற்றிலை போடாமல் அருவா மீசை வைக்காமல் யோசிக்கும் திறனும் கொண்டிருந்தார். சிறிய யோசனைக்குப் பின், அருகில் அமர்ந்திருந்தவரிடம் கேட்டார், எப்போ படம் ரிலீஸ் பண்ணப் போறாங்களாம்?. அதற்கு அவர், தெரியலைங்க, ஆனால் அரசின் இலவசக் காப்பீட்டுத் திட்டம் நம்ம ஊருக்கு வர்றதுக்கு முன்னாடியே ரிலீஸ் பண்ணப் போறதா சொல்லறாங்க..



ஐயா, நாமெல்லாம் ஆனந்த தொல்லை ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு ஏன் ரோட்டை குறுக்காட்டி உண்ணாவிரதம் இருக்கக்கூடாது? என்றார் கூட்டத்தில் இருந்த ஒரே ஒரு இடதுசாரி. நம்ம ஊர் ரோட்ல பால் வண்டி கூட போறது இல்லை, அதைக் குறுக்காட்டி என்ன பிரயோசனம், வேற ஏதாவது சொல்லுங்க என்றார் நாட்டாமை. பேசாம பவர் ஸ்டாரை வர்ற தேர்தல்ல நம்ம தொகுதி எம்பி ஆக்கிடறோம்னு சொல்லி படத்தை இங்கே ரிலீஸ் பண்ண வேண்டாம்னு சொல்லிடலாமா? என்றார் ஆளுங்கட்சி அன்பர். யோவ் பிரச்சனை பன்றது நம்ம ஊர் தியேட்டர் ஓனர், அவருக்கு ஏதாவது வழி சொல்லுங்க என்று சண்டைக்கு வந்தார் எதிர்க்கட்சி நண்பர். சண்டை போடாதீங்க, நாட்டாமை நல்ல தீர்ப்பா சொல்லுவார் என்றார் தெலுங்கு பவர் ஸ்டாரின் ரசிகர் ஒருவர்.

ஆழ்ந்த யோசனைக்குப் பின் நாட்டாமை வாயைத் திறந்தார். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி நாமெல்லாம் பவர் ஸ்டாரின் ரசிகர்கள் ஆகிறது தான். மதுரைல அவரு தலைமையில் ஐந்து இலட்சம் பேர் மன்றத்துல இணையுறாங்களாம். நாமும் இணைஞ்சு அவர்கிட்டே கோரிக்கை வைப்போம் உங்க படத்தை தமிழ் நாட்டைத் தவிர எங்கு வேணும்னாலும் ரிலீஸ் பண்ணுங்கன்னு! இது தான் இந்த நாட்டாமையோட தீர்ப்புன்னு சொல்லிட்டு தன்னோட செல் போனை எடுத்திட்டு தனியாய்ப் போனார். அப்படியே பவர் ஸ்டாருக்கு போனைப் போட்டு சார் நான் இரண்டாயிரம் பேரை உங்க மன்றத்துல இணைக்கிறேன், சொன்னபடி பணம் வந்திடும்ல எனக்கேட்டு உறுதி செய்துகொண்டார்..