குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Sunday, December 23, 2012

நீ.எ.பொ.வசந்தமும் பீட்டர் மேனனும்

உலகப் படங்கள் தவிர்த்த மற்ற படங்களைப் பார்த்து மாமாங்கம் ஆகிவிட்ட படியால் ஒரு தமிழ்ப் படத்தை பார்க்க மூன்று மணி நேரம் செலவிட வேண்டுமா என்ற யோசனையில் இருந்தேன். இணையத்தில் கொட்டிக் கிடந்த  விமர்சனங்களில் நீ தானே என் பொன் வசந்தம் ஓர் ஆங்கிலப் படமே என விளக்கியிருந்தனர். மின்னலே, காக்க காக்க தவிர்த்த மற்ற பீட்டர் மேனன் படங்களை தமிழ் சப்-டைட்டில் பிரச்சினையால் பார்க்காமல் இருந்தேன். இருப்பினும் பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் மற்றும் விண்ணைத் தாண்டி வருவாயா போன்ற படங்களின் சில காட்சிகள்/பாடல்களை டிவியில் பார்த்திருந்தேன்.

படம் ஆரம்பிக்கும் போது ஒரு சந்தேகம் வந்தது, ஹீரோ யார், ஜீவாவா இல்லை சந்தானமா என! முதல் பாடல் முடிந்ததும் ஆரம்பித்தது ஏழரை. நான் ஆங்கிலம் முதற்கொண்ட பிற மொழிப் படங்களை சப்-டைட்டிலுடன் பார்த்தே பழக்கப்பட்டவன். எனக்கு இந்தப் படத்தில் பேசும் வசனங்கள் சுத்தமாகப் புரியவில்லை. அட நீங்க வேற 90களில் வளரும் குழந்தைகள்கூட ஆங்கிலத்தில் தான் கதைக்குமென காட்டியிருந்தார். அப்புறம் ஜீவா ஃபேமிலி. ஒரு சீனில் லாங் ஷாட்டில் ஜீவா தவிர்த்து மூன்று பேரைக் காட்டுகிறார்கள். அவர்கள் அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் தம்பி என்பதை படத்தின் பின் பகுதியில் விளக்குகிறார் இயக்குனர். இது Non-linear படமோ என்ற சந்தேகத்தை எனக்கு ஏற்படுத்தியது. அடுத்தடுத்து வந்த காட்சிகள் அப்படியெல்லாம் இல்லை என்று சொல்லி என் நெஞ்சில் பாலை வார்த்தார்.படத்தில் ஜீவாவின் அப்பா பேசும் மொத்தம் பத்து வார்த்தைகளும் ஏதோ ஒரு மெகாத் தொடரில் இருந்து சுட்டவை. அது எந்தத் தொடர் என்று தெரிந்தவர்கள் சொன்னால் தன்யனாவேன். அடுத்து சுய எள்ளலில் இயக்குனர் சளைத்தவர் இல்லை என்பதை நிருபிக்க சந்தானத்தின் காதல் காட்சி. அடுத்து சுனாமி மறுசீரமைப்புக்கு செல்லும் ஒரு ஆசிரியை ஆங்கிலத்தில் மட்டுமே பாடம் நடத்துகிறார் என்ற காட்சியில் மணப்பாடு தமிழனின் ஆங்கிலப் புலமை கண்டு வியந்து சீட்டை விட்டே எழுந்து நின்றுவிட்டேன்.

ஆக மொத்தமாய் படத்தில் கதை என இயக்குனர் சொல்ல வருவது, தோரயமாய் ஏழு எட்டு வயதில் தோழியுடன் நட்புக் கொண்டிருந்தால் அது காதலாப் பரிணமிக்கும் வாய்ப்பு அதிகம். அந்தக் காதலை பத்தாவதிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு ஏதோ ஒரு இடத்தில் மீட்டெடுத்து தூசி தட்டி திரும்பவும் கொண்டு வந்து அதன்பின் பிரிந்து, அதற்குப்பின் கல்லூரிக் காலத்தில் ஏதோ ஒரு போட்டியில் திரும்பவும் தோழியைச் சந்தித்து திரும்பவும் காதலாகி கண்ணீர் மல்கவெல்லாம் இல்லை, அப்புறம் திடீரென நல்லவனாகி மறுபடியும் தோழியுடன் சண்டை போட்டு படித்து வேலைக்குப் போய் அம்மா-அப்பாவை ஃபாரின் டூர் அனுப்பி, வீட்டில் ஃஷோபா செட் மாற்றி, மணப்பாடு போய் அவளுடன் திரும்ப சண்டை போட்டு, வேறொரு பெண்ணுடன் நிச்சயமாகி அப்புறம் காதலியைக் கைப் பிடிப்பதுதான். ஜீவா அளவுக்கு உங்களுக்குப் பொறுமை இருக்குமா எனத் தெரியவில்லை. எனவே உங்களுக்குத் தோழி இருந்தால் இப்பவே நட்பைத் துண்டித்து விடுங்கள். 

படத்தில் சிறப்பு அம்சம் எனப் பார்த்தால் சமந்தாவின் இயல்பான நடிப்பு. அடுத்து முக்கியமாய் இசை. இசைஞானி தவிர்த்து இசைக்கடல், சூறாவளி என  யார் இசை அமைத்து இருந்தாலும் இந்த அளவிற்குக்கூட படம் ஓடியிருக்குமா எனத் தெரியவில்லை. படத்தின் பல இடங்களில் இசையே ஓட்டிச் செல்கிறது.  தன் எல்லாப் படங்களிலும் தலை காட்டும் பீட்டர் மேனன், இதில் அந்தத் தவறைச் செய்யவில்லை போலும், ஆனால் அதற்குப் பதில் ஒரு பாடலைப் பாடியிருந்தார். மற்றவர்கள் போல அவர் விளம்பரப் பிரியர் இல்லை என்பது இந்தப் பாடலைப் பாடிக்கொண்டிருப்பவர் என அவர் பெயர் போடாமல் இருந்ததிலிருந்தே தெரிந்தது.


இயக்குனர் ஆங்கிலப் படங்களை பார்த்து காட்சிகளை அமைப்பதைக் கொஞ்சமேனும் குறைக்கலாம். மிஸ்டர் பீட்டர் மேனன், பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்..


1 comment:

Prabu M said...

//எனவே உங்களுக்குத் தோழி இருந்தால் இப்பவே நட்பைத் துண்டித்து விடுங்கள்//

super boss :-)
Moral of the story :))