குறிப்பு

என் வலைப்பூவிற்கு லோகோ அமைத்துக் கொடுத்த எஸ்கே(S.K) அவர்களுக்கு நன்றி.

Thursday, December 5, 2013

எனக்குப் பிடித்த....

வருஷக் கடைசி வந்துவிட்டது. இனி என்ன? டிசம்பர் மாச கச்சேரி பற்றி, கல்யாணி, தோடின்னு பல ராகத்தை அங்க இங்க இருக்கிற சபா சைட்டுல சுட்டு அது சூப்பர் இது சூப்பர்ன்னு வாரமலர் முதற்கொண்டு ராணி காமிக்ஸ் வரைக்கும் எழுதுவாங்க.

அப்புறம் இசை விமர்சனம் பன்றேன்னு ஒரு க்ரூப் கிளம்பி கேபி சுந்தராம்பாள்ல இருந்து பிரிட்னி ஸ்பியர்ஸ் வரைக்கும் வாய்ஸ் சரி இல்லை, மாடுலேஷன் இல்லை, உயிர் இல்லைன்னு கலாக்கா கணக்கா டார்ச்சர் பண்ணுவாங்க. இதையெல்லாம் பொறுத்துக்கலாம். இன்னொரு க்ரூப் இருக்கு.. இருங்க, நான் உங்களை சொல்லல..

அவார்டு தர்றேன், விருது தர்றேன், கருது தர்றேன், எனக்குப் பிடித்த டாப் டென் சூப்பர்  படங்கள், எனக்குப் பிடித்த டாப் டென் மொக்கைப் படங்கள், எனக்குப் பிடித்த டாப் டென் பிகர்கள், எனக்குப் பிடித்த டாப் டென் பதிவர்கள்ன்னு சொல்லி கிளம்புவாங்க பாருங்க.. அதைத்தான் பொறுத்துக்க முடியாது.அட விடுங்க, இதெல்லாம் சோஷியல் மேட்டர் விட்ருலாம். அதுக்கும் போயி எனக்கு உங்க விருதுல, லிஸ்ட்ல இது பிடிக்கல, அது பிடிக்கலன்னு சொல்லி ஒரு க்ரூப் கமெண்ட் போடும் பாருங்க, அவங்களை மட்டும் விடவே கூடாது. ஏன்யா அவரு ஏதோ அவருக்குப் பிடிச்சதுன்னு சொல்லிட்டு அவரு சந்தோசத்திற்கு ஒரு லிஸ்ட் போடுறார்ன்னா அங்கே போய் ஏன் நொன்னை பேசுறீங்க? வேணும்னா நீங்களும் ஒரு லிஸ்ட் போட்டுட்டு அதை எங்களுக்கு சொல்லுங்க. அங்கே வந்து கமெண்ட் போட்டு உங்களை நோவடிக்கிறோம். 

கடைசியா, புத்தக கண்காட்சி. யப்பா.. இதை சொல்லியே ஆகணும். முன்னெல்லாம் நான் வாங்கிய புத்தகங்கள், வாங்கப் போற புத்தகங்கள், நான் இத்தனாந் தேதி போறேன்னு சொல்லி ஸ்டேடஸ், பதிவு போடுவாங்க. ஆனாப் பாருங்க, இந்த வருஷத்தில் இருந்து என்னோட இந்த பொஸ்தவம் ரிலீஸ் ஆகுது, என்னோட இத்தனை பொஸ்தவம் ரிலீஸ் ஆகுது, இதெல்லாம் பிரிண்டிங்ல இருக்குது, பிரிண்டிங் மெஷின் ஆர்டர் பண்ணிருக்கேன்னு ஏகப்பட்ட ஸ்டேடஸ், பதிவுகள். அதிலயும் பாருங்க, நாவல்ல இருந்து, கட்டுரையில் இருந்து, கவிதையில் இருந்து, கெணத்தில் இருந்துன்னு ஏகப்பட்டது. முடியலடா சாமீ...

ஆனா ஒண்ணுங்க, தமிழ்நாட்டுல மட்டும் தான் வாசகர்களை விடவும் எழுத்தாளர்கள் அதிகமா இருக்காங்கன்னு திரும்பவும் நிரூபிச்சி இருக்கோம். அப்படியே என்னோட டாப் டென் படங்கள் பதிவு/ஸ்டேடஸுக்கு லைக் போட்டிடுங்க..

Friday, October 25, 2013

நானும் குறும்படமும்

ஆபீஸில் தீபாவளி சிறப்பு வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு வாரங்களுக்கு தினசரி ஏதாவது ஒரு சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருக்காங்க. அதில் கிடைக்கும் பணத்தை டிரஸ்ட்டுக்கு தரப்போறாங்களாம். அப்படித்தான் குறும்படம் திரையிடல் என்ற நிகழ்ச்சி அறிவிச்சிருந்தாங்க. அதாவது நேற்று அந்த திரையிடல் ஆனால் ரெண்டு நாளைக்கு முன்னால் தான் சொன்னாங்க. நானும் இங்கே நண்பர்களிடம் ஐடியா கேட்டுப் பார்த்தேன்.

கிறிஸ்டோபர் நோலனின் "Doodle Bug" ரீமேக் பண்ண சொல்லி ராஜன் சொல்லியிருந்தார். இன்னொரு நண்பர் ரங்க ராஜன் (https://www.facebook.com/ungalranga) ரெண்டு நாள்ல ஏன் படம் எடுக்க முடியாதுன்னு படம் எடுங்க என்று சொல்லி இருந்தார். இது நல்லா இருக்கேன்னு நேற்று அதற்கான ஆயத்தங்கள் செய்து களமிறங்கினோம். எங்ககிட்டே இருந்தது SONY DSC HX200V காமிரா மட்டும் தான்.

அதை ஒரு கான்பிரன்ஸ் ரூமில் ஓரமாய் வைத்துவிட்டு அந்த ஓவல் வடிவ டெஸ்க்கில் டீம் மெம்பர்களை உட்கார வைத்து விட்டோம். கேமிராமேன் அப்பப்போ ஒவ்வொருத்தரையும் ஃபோகஸ் செய்வார். கிட்டத்தட்ட 12 Angry Men போல எல்லோரையும் கவர் செய்ய டிரை செய்தோம்.

ஸ்க்ரீன் பிளே என்னான்னா...

ரெண்டு நாள் தான் இருக்கு... எப்படி முடியும்? கேமிரா இல்லை, நடிக்க ஆளுக இல்லை, ஸ்க்ரிப்ட் இல்லை,  யாருக்கும் முன் அனுபவம் இல்லை. BGM இல்லை, எடிட்டிங் இல்லை இப்படி என்னென்ன ரீசன் இருக்கு, ஒரு சிறந்த குறும்படத்தை எடுக்க முடியாமல் போனதற்கு.. என்று ஒவ்வொருவராய் பேச வைத்தோம். நார்மலாக எப்படி பேசுவோமே அப்படியே பேசி இருந்தார்கள். அங்கங்கே டீம் மேனேஜர், HR போன்றவர்களை வஞ்சப் புகழ்ச்சியில் ஓட்டியும் இருந்தோம்.

எங்கள் கேமிராமேன் ரொம்ப நல்லவர். எல்லோரையுமே அழகா படம் பிடித்து இருந்தார். கேமிராவில் Stereo மைக் இருந்ததால் ஆடியோ சூப்பராக இருந்தது. எதையும் எடிட் பண்ணாமல் அப்படியே திரையிட்டோம். ரசிகர்கள் தலையில் வைத்துக் கொண்டாடினார்கள் என சொல்ல முடியாது, மற்ற படங்களுக்கு கிடைத்த வரவேற்பை விட இதற்கு வரவேற்பு அதிகம். (மற்ற மூன்று படங்களும் லவ் ஸ்டோரியை மாற்றி மாற்றி எடுத்து இருந்தார்கள். இரண்டு நாள் என்பதால் அப்படி ஒன்றும் சிலாக்கியமில்லை)

நண்பர்கள் நலன் கருதி அந்த குறும்படத்தை இணையத்தில் வெளியிடவில்லை. மேலும் இந்த ஸ்க்ரிப்டை நீங்கள் நல்லதொரு குறும்படமாய் எடுக்க எனக்கு யாதொரு ஆட்சேபணையும் இல்லை..

Tuesday, October 22, 2013

ஓர் இலக்கியவாதியின் ஸ்க்ரீன்ஷாட் கதா!

ஸ்க்ரீன் ஷாட் அல்லது திரை சொட்டு எடுத்தல் என்பது IT வாழ்க்கையில் மிக முக்கியமான பணிகளில் ஒன்று. எதையுமே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்பவர்கள் பாக்கியவான்கள். தவறான செய்திகளுக்கோ, அடுத்தவனை மாட்டி விடுவதற்கோ, தவறினை ஊருக்கே சொல்லிக் காட்டுவதற்கோ இன்னும் பிற காரணங்களுக்காக ஸ்க்ரீன் ஷாட் ITயில் பேமசானது.

கீ போர்ட் கண்டுபிடித்த காலம் தொட்டே ஸ்க்ரீன் ஷாட் இருக்கா இல்லை ஸ்க்ரீன் ஷாட் வந்த பின் தான் "Print Screen" பட்டன் வந்ததா என்பது கோழியில் இருந்து முட்டை வந்ததா கதை போலத்தான். இந்த ஸ்க்ரீன் ஷாட் ITயில் பெரும் பங்காற்றுகிறதோ இல்லையோ இப்போதெல்லாம் சமூக வலைத்தளங்களில் மிக முக்கியப் பங்காற்றுகிறது. ஸ்க்ரீன் ஷாட் எடுப்பதில் யார் கை தேர்ந்தவர்கள் என்பதில் பெரும் போட்டியே இங்கே நடக்கிறது.

ஸ்க்ரீன் ஷாட்டால் உலகத்தில் என்னென்ன பிரச்சினைகள், மாற்றங்கள் வந்திருக்கிறது என்பதை கூகிளிட்டு தேடிக்கொள்ளவும். அவ்வளவு முக்கியமானது இந்த ஸ்க்ரீன் ஷாட். எனக்குத் தெரிந்து ஏகப்பட்ட போஸ்ட்கள் வைராஸ் டெலீட் ஆனதில் இருந்து காக்கா கூட்டம் அழிந்தது வரை தமிழ் இலக்கியத்தில் ஸ்க்ரீன் ஷாட்டின் கை இருக்கிறது.எங்களது பிராஜக்ட் SaaS மாடல். அதாவது நாங்க ஒரே அப்ளிகேஷனை ஒன்றுக்கும் மேற்பட்ட கிளையன்ட்களுக்கு விற்போம். அப்படித்தான் ABC என்ற கம்பெனிக்கு விற்கப்பட்டது. அந்த ABC கம்பெனி ஒரு புரோக்கர் கம்பெனி. அவர்கள் XYZ என்ற கிளையன்ட்டுக்கு எங்களது பிராஜெக்ட்டை implement செய்தனர். இதுவரையில் எந்த பிரச்சினையும் இல்லை..

இந்த XYZ கம்பெனிகாரங்க சுத்தமான அமேரிக்கா வாசிகள். அப்போதே எங்களுக்கு மைல்டா டவுட்டு வந்தது. அப்புறம் வரும் மெயிலில் "Computer Have problem" என தலைப்பிட்டு வரும். எங்களது சந்தேகம் மேலும் வலுவடைந்தது.

கடைசியா ஸ்க்ரீன் ஷாட் கேட்டதுக்கு அவங்க பண்ணிய ரிப்ளை தான் அமேரிக்காக்காரன் எவ்ளோ பெரிய அறிவாளி என்பதை எங்களுக்கு உணர்த்தியது. அப்படி என்னதான்னு கேட்கறீங்களா?

எர்ரர் என்னான்னு கேட்டதுக்கு, கேமிராவில் ஸ்க்ரீனை போட்டோ எடுத்து அதை போட்டோ ஷாப்ல வச்சி எர்ரர் வரும் இடத்தை அம்புக்குறியிட்டு காட்டி மெயில் அனுப்பி இருந்தாங்க..

Wednesday, October 16, 2013

ஓர் இலக்கியவாதியின் பாஸ்வேர்ட் கதை

முன்னெல்லாம் அலமாரி, பீரோ இதற்கு ஒரு பூட்டுக்கு ரெண்டு பூட்டா போடுவாங்க. அதற்கு முன்னே மண்ணுக்குள்ளே புதைச்சு வச்சிருந்தாங்க. அப்புறம் நம்பர் லாக்கிங் சிஸ்டம் வந்தது. இது எல்லாமே நம்மோட பொருளையோ, இன்னபிறவற்றையோ மற்றவர்கள் திருடக்கூடாது என்பதற்காகத்தான்.

இப்போ எல்லாமே கம்ப்யூட்டர், ஆன்லைன்னு ஆனதற்குப் பின் பாஸ்வேர்ட் அமைப்பது தான் மிகப்பெரிய கஷ்டமான வேலை. நீங்க எவ்வளவு தான் ஐடில பெரிய அப்பாடக்கரா இருந்தாலும் சரியான பாஸ்வேர்ட் வைக்காமல் விட்டுட்டீங்கன்னா உங்க பணம், இமேஜ், வேலை இப்படி எல்லாமே கோவிந்தா ஆகிடும்.

பாஸ்வேர்ட் வைக்கிறது ஒரு காலத்துல சாதரணமாகத்தான் இருந்தது. ஹேக்கிங் அதிகமானதற்கு அப்புறம் அதில் பல வகையான மாற்றங்கள் கொண்டு வந்தாங்க. ஸ்பெஷல் கேரக்டர் வைங்க, கேப்பிடல் லட்டர் வைங்க, நம்பர்கள் கண்டிப்பா இருக்கணும் இப்படி.ஆன்லைன் பேங்க்கிங், டிரான்ஸாக்சன் அதிகமானதிற்கு அப்புறம் ஒவ்வொரு சைட்லையும் நம்ம பேரை ரெஜிஸ்டர் பண்ணிட்டு வித்தியாசமான பாஸ்வேர்ட் வைக்க வேண்டியதாகிடுச்சி. ஒரே பாஸ்வேர்ட் வைக்கிறதுல ரெண்டு பிரச்சினைகள்.

ஒண்ணு, யாராவது நம்ம பாஸ்வேர்ட் கண்டுபிடிசிட்டா அப்புறம் ஈஸியா எல்லாத்தையும் சுருட்டிடலாம்.

ரெண்டாவது, பாஸ்வேர்ட் சிஸ்டம் ஒவ்வொரு சைட்டும் ஒவ்வொரு மாதிரி வச்சிருக்காங்க.

இப்போ லாகின் வித் பேஸ்புக், கூகிள் ஆப்ஷன்ஸ் வர ஆரம்பிச்சிருக்கு. ஆனாலும் இதை பேங்க் அக்கவுண்டுக்கு பயன்படுத்த முடியாது.

என்ன ஆச்சின்னா, பாஸ்வேர்ட் எல்லாம் மறந்து போயிருதுன்னு சொல்லி எல்லாம் பாஸ்வேர்ட்களையும் ஒரு எக்ஸெல் ஷீட்ல போட்டு அதற்கு ஒரு பாஸ்வேர்ட் போட்டு வச்சிருந்தேன்.

இப்போ அந்த எக்ஸெல் ஷீட் பாஸ்வேர்ட்டை மறந்திட்டேன்..

Friday, October 4, 2013

ராஜா ராணி பார்க்காத விமர்சனம்

எனக்கு ராஜா ராணி படம் சுத்தமா பிடிக்கல. படம் பார்த்திட்டியான்னு கேட்கறீங்களா? படம் பார்த்துத் தான் விமர்சனம் எழுதணும்னு ஏதாவது இருக்கா? இல்லே இப்போ எழுதறவங்க எல்லாம் படம் பார்த்துத் தான் விமர்சனம் எழுதறாங்களா? ஆமா எனக்கு ராஜா ராணி படம் சுத்தமா பிடிக்கல. படம் எப்படி எடுக்கக் கூடாதுன்னு சொல்லிக்கொடுக்க இந்தப் படம் ஒரு உதாரணம். அவ்ளோ கேனத்தனமா, கிறுக்குத்தனமா மொக்கையா இருக்கு.

ஏன் புடிக்கலன்னு காரணம் கேட்கறீங்களா? ரொம்ப சிம்பிள், எங்க எலக்கிய தல பன்னிக்குட்டி ராம்சாமி நஸ்ரியாவோட தீவிர இரசிகர். படத்துல நஸ்ரியாவோட இன்ட்ரோ சீன்ல அசிங்கமா ஆடவிட்டுட்டாங்க. இது ஒரு காரணம் போதுமே? அதுவுமில்லாம படத்த பத்தி எங்க தல இன்னும் எதுவும் சொல்லல. ஏற்கனவே அந்த பட டைரக்டரோட வாய்க்கா தகராறு வேற இருக்கு. அதான் இப்போதைக்கு இப்படி ஒரு விமர்சனம். நாளைக்கே எங்க தல படம் நல்லாருக்குன்னு எழுதிட்டார்னா அப்புறம் பாருங்க, இந்த போஸ்ட்ட வைரஸ் டெலீட் பண்ணிடும்.போன வாரத்துல ஒரு நாள் தல ஒரு போஸ்ட் போட்டிருந்தார். எக்ஸெல்ல (நல்லாப் படிங்க excel தான்) சில எடிட்டிங் ஹெல்ப் கேட்டிருந்தார். அதாகப்பட்டது என்னான்னா எக்ஸெல்ல பேஜ் நம்பர் எப்படி போடுறது? அவருக்கு 500-700 வது பக்கம் வரைக்கும் ஏதோ  மாத்தணுமாம். நான் கேட்டேன் தல, அது பக்கமா? இல்லை Rowவான்னு.. பொசுக்குன்னு கோவப்பட்டு என்னை தூக்கிட்டார்ன்னா பாருங்களேன். அப்புறம் அவருக்கு புடிச்ச பகார்டி லெமன் வாங்கிக் கொடுத்து தாஜா பண்ணி திரும்பவும் சேர்ந்தது தனிக் கதை.

நிற்க, எங்கே விட்டேன்? எக்ஸெல் பிரச்சினை என்னான்னா, இவரோட எக்ஸெல்ல பிரான்ஸ்லயோ இல்லை கிரீஸ்லயோ யுனிவர்சிட்டில பாடமா வைக்கப் போறாங்களாம். அதான் எடிட் பண்ணிட்டு இருக்கார். எக்ஸெல் எடிட் பண்ண எங்க தல ஒரு நாளைக்கு 37 மணி நேரம் வேலை பார்க்கிறார். எப்பாடுபட்டாவது எக்ஸெல்ல ரெடி பண்ணி கொடுத்திட்டா நம்ம பசங்ககிட்டே கொடுத்து பிரிண்ட் எடுத்துக்கலாம்.

ஆமா, சொல்லுங்க, எக்ஸெல்ல எப்படி பேஜ் சொல்லுறது? row கணக்கு தானே? ஒவ்வொரு ஷீட்டும் தனிப் பேஜ்ஜா?


Wednesday, July 31, 2013

ஐடி துறையும் படித்த மக்களும்

நாடே ஐடி துறையினரை வெறுத்துப் பார்ப்பதாய் தோன்றுகிறது. ஏன் இப்படி ஒரு சமூக மக்கள் வாழ்கிறார்கள், அவர்களால் மற்றவர்களுக்கும் தொல்லை என மற்றவர்கள் நினைப்பதாகவே தோன்றுகிறது.

நேற்று சுப்ரஜா ஸ்ரீதரன் அவர்கள் கீழ்க்கண்டவாறு பேஸ்புக்கில் எழுதி இருந்தார்.

'நான் இல்லையென்றால் உலகம் அழிந்து போகும்' என்கிற இறுமாப்பு கொண்ட ஐ.டி.தலைமுறையினர் சிலர் தற்கொலை செய்து கொள்வதால் உலகின் சுழற்சியை நிறுத்தி விட முடியுமா?

https://www.facebook.com/suprajaa.sridaran/posts/534759176579741

அதாவது ஐடி மக்கள் தற்கொலை செய்துகொள்வது இறுமாப்பு, அகங்காரம், அகந்தை போன்றவை தான் காரணிகளே ஒழிய அவர்களின் பணி, சூழல், தனிமை, விரக்தி, காதல் போன்ற எந்த மனித உணர்வு சார்ந்த ஒன்றும் காரணமாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்திருந்தார். அங்கே கமெண்ட் போட்ட அன்பர்களும் சரி அதை ஆதரித்தே பேசியிருந்தனர். அதாவது ஐடி துறையினர் அதிக சம்பளம் வாங்குகின்றனர், அவர்கள் செருப்பு தைக்கும் சகோதரனைவிட பெரிய ஆட்கள் கிடையாது, இன்ன பிற.. அதிலும் நான் கேட்ட ஒரு கேள்விக்கு ஒரு மேதாவி சொல்லியிருந்தார், 38 வயதுக்கு மேல் உங்களை அங்கே பணியாற்ற விட மாட்டார்கள் என..

ஏதோ அவரின் நண்பருக்கு நடந்த பழிவாங்கல் பற்றி சொல்கிறார். அதுவும் கூட பழிவாங்கல் என்பது காதலால் வந்ததே அன்றி அகந்தை/இறுமாப்பு எல்லாம் காணோம். அவர் என்ன சொல்ல வர்றார் என்பதை அவர்தான் விளக்கி சொல்ல வேண்டும்.

ஐடி மற்றும் அங்கே பணிபுரிபவர்கள் பற்றி எந்த அடிப்படை தகவலும் தெரியாமல் போகிற போக்கில் இதுபோல கமெண்ட் அடிப்பது இது ஒன்றும் புதிதல்ல. டக் பண்ணி ஷூ போட்டு ஐடி கார்டு போட்டுட்டு போறவன் எல்லாம் ஐடி துறையினர் என்பதே அவர்கள் எண்ணம். இது படிக்காத மக்களும் சரி  படித்த, அறிவுஜீவிகள் என்று சொல்லிக் கொள்பவர்களும் சரி எல்லோருமே ஒரே எண்ணத்தில் தான் இருக்கின்றனர். வீட்டு வாடகையில் இருந்து ஆட்டோக்காரர் வரை எப்படி எங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையெல்லாம் வசமாக மறந்து விட்டார்கள்.

அங்கே எவ்வளவு கஷ்டம் அனுபவிக்கின்றோம் என்பதை இவர்கள் அறிவதே இல்லை. கம்பியூட்டர் முன்னாடி உட்கார்ந்து கீ போர்ட்ல தட்டுறதுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம் என்பதே இவர்களின் வாதம். இது முக்கியமாக ஏற்கனவே பணியில் அதுவும் அரசுப் பணியில் இருப்பவர்களை ரொம்ப பாதித்து உள்ளது போலும். அவர்களின் சம்பளத்தை ஐடி சம்பளத்துடன் ஒப்பிட்டு இது போன்ற கமெண்ட்களை வீசி செல்கின்றனர் என நினைக்கிறேன். இவர்கள் தான் முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.

இரவு விடிய விடிய கால் சென்டரில் வேலை பார்ப்பவர்கள், அதிலும் குறிப்பாக வெளிநாட்டு கஸ்டமர் கேரில் இருப்பவர்கள் படும் கஷ்டம் இவர்களுக்குத் தெரியுமா? வெள்ளைக்காரன் கண்டபடி கெட்ட வார்த்தையில் திட்டுவதை கேட்டுக் கொண்டே அவனுக்கு பதில் சொல்ல வேண்டும். மொத்தமாய் பத்து நிமிஷ பிரேக், அதிலும் சிகரெட் ஊதி உடம்பைக் கெடுத்துக் கொள்கிறார்கள் அது தெரியமா? டெட்-லைன் என்ற வார்த்தையை நினைத்தே தூங்காமல் 48 ~ 72 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்பவர்களைப் பற்றி தெரியுமா? இது போக ஒரு நாளைக்கு மொத்தமே 45 நிமிஷம் மட்டுமே பிரேக் கொடுக்கும் BPO/KPO பற்றித் தெரியுமா?

அடுத்தது சம்பளம். இப்போது ஐடியில் சம்பளத்தை முன்போல தூக்கிக் கொடுப்பது இல்லை. நீங்கள் நினைக்கும் இலகரங்களில் சம்பளம் எல்லாம் பத்து இருவது வருஷத்திற்கு முன்னால் நடந்ததாக இருக்கலாம். எதற்கும் இதை ஒருமுறை படித்துப் பாருங்க.. http://www.nisaptham.com/2013/07/blog-post_18.html

உயரமான இடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி உள்ளது, அதுவும் ஐடி துறையினர் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். - இது செய்தி.. இதற்கான அடிப்படை காரணத்தை அலசாமல் வேறு எதையோ பேசுவது அவர்களின் காழ்ப்புணர்ச்சி, வயிற்றெரிச்சல், பொறாமை போன்றவற்றையே காட்டுகிறது..

எனக்கு தெரிந்த வரையில் பணி, வேலைப்பளு, தனிமை, காதல், விரக்தி போன்ற ஏதாவது ஒன்றே முக்கிய காரணமாக இருக்க முடியும். இதைப் பற்றி அலச நான் ஒன்றும் மனோத்ததுவ நிபுணரும் இல்லை.

தொடரும்...