ஒவ்வொரு புது வருடத்திலும் நமக்கு ஒரு வயது கூடுகிறது. சில பல நல்ல மற்றும் கெட்ட சம்பவங்கள் நமக்கு நடக்கிறது. பல மரங்கள் உயிரிழக்கின்றன. பஞ்ச பூதங்களும் மேலும் மாசுறுகின்றன. மக்கள் தொகையும், வாகனங்களும், குற்றங்களும், பொறாமைகளும், ஆசைகளும், ஊழல்களும் அதிகரிக்கின்றன.
கனவு நிறைவேறியதென சிலர் மகிழ்ச்சியுறும் அதே வருடத்தில் கட்டிய கனவுக்கோட்டை தகர்ந்து போனதே என சிலர் வேதனைப் படுகின்றனர். படிப்பு முடிந்து விட்டது என சிலர் சந்தோசப் படுவதும் பொதுத்தேர்வு என சிலர் கஷ்டப்படுவதும் ஒரே வருடத்தில் தான். கொள்ளையடித்த பணத்தை காப்பாற்ற முடியாமல் ஒருவர் தடுமாறுவதும் சமையலுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வாங்கக் கூட காசில்லாமல் பலர் தடுமாறுவதும் ஒரே வருடத்தில் தான்.
புத்தாண்டுக் கொண்டாட்டங்களும் இன்ன பிற கோலாகல விழாக்களும் நடந்த ஆண்டில் தான் பலபேர் முன்னிலையில் பிரசவித்த பெண் இறந்தாள். குடிநீருக்கே கஷ்டப்படும் அதே வருடத்தில் தான் மழை வெள்ளத்தால் பலர் இறந்தனர்.
ஒவ்வொரு புது வருடமும் நமக்கு ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. மேலும் மேலும் தேட வேண்டும், எதையாவது சாதிக்க வேண்டும், கனவை அடையவேண்டும், இன்ன பிற வேண்டும் என நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் பணி புத்தாண்டுக்கே!!
கடந்த வருடத்தைப் போலில்லாமல் இனிவரும் வருடம் துன்பங்கள் குறைவாகவும் நன்மைகள் அதிகமாகவும் தரும் என்ற எதிர்பார்ப்புடன் புத்தாண்டை வரவேற்போம். தை ஒன்றா இல்லை சித்திரை ஒன்றா இல்லை ஜனவரி ஒன்றா, புத்தாண்டு எதுவாகினும் நம் வாழ்க்கையை சந்தோசமாய் மாற்ற வரும் புத்தாண்டை வரவேற்போம்.
அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

