தீபாவளி நெருங்கிவிட்டது. புதிய உடைகளும் பட்டாசும் இனிப்புவகைகளும் இனி கடைகளெங்கும் வியாபித்திருக்கும். வண்ணவண்ண ஆடைகள் ரங்கநாதன் தெருவெங்கும் நிறைந்திருக்கும். தென்னிந்திய, வட இந்திய, மேற்கத்திய ஆடைகள் என பலதரப்பட்ட ஆடைகள் கிடைக்கும். மனிதன் ஆடைகளால் நாகரிகம் அடைந்தானா அல்லது நாகரிகத்தால் ஆடைகளை அணிந்தானா என்று தெரியவில்லை.
ஆடைகளுக்கும் நாகரிகத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஒவ்வொரு நாகரிகமும் தனக்கென தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், மொழி, கலை, கலாச்சாரம் இவற்றுடன் ஆடைகளையும் கொண்டுள்ளது. ஆடைகள் அந்த நாகரிகத்தின் ஒரு அடையாளமாகவும் கருதலாம். காலங்கள் மாறும்போது ஆடைகளும் அவற்றின் தேவைகளும் மாறுகின்றன. தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் தலைப்பாகை அத்தியாவசியமாய் இருந்தது. ஆனால் இன்று தலைப்பாகை என்றால் என்னவென்றே அறியாத தலைமுறையும் உள்ளது.
என்னுடைய பள்ளிக்காலம் கிராமத்திலேயே கழிந்தது. அதுவரை விதவிதமான ஆடைகளை நான் தொலைக்காட்சியில் கண்டதோடு சரி. ஆண்களுக்கு வேட்டி, சட்டை, பான்ட்; பெண்களுக்கு சேலை, தாவணி, பாவாடை அதிக பட்சமாய் சுரிதார். கிராமத்தில் அணிந்திருக்கும் ஆடையால் ஒருவன் மதிப்பிடப் படுவதில்லை. ஆனால் நகரத்தில் ஆடைகள் தான் ஒரு மனிதனின் அந்தஸ்தை நிர்ணயிக்கின்றன. ஒருவன் எவ்வளவு தான் பணம் படைத்தவனாக இருந்தாலும் கிழிந்த ஆடை அணிந்திருந்தால் அவனுடைய வீட்டிற்குள் கூட போக முடியாது.
சென்ற வாரத்தில் ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டிற்க்கு நான் சென்ற போது அவர் அப்போதுதான் தீபாவளிக்காக வாங்கி வந்த ஆடைகளை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தார். மொத்தமாக இருபது ஆடைகள். "எதற்காக இவ்வளவு ஆடைகள்? உங்களுக்கு மட்டுமா? இல்லை உறவினர்களுக்கும் சேர்த்து எடுத்து விட்டீர்களா?" என்று கேட்டேன். "இவை அனைத்தும் எனக்கு மட்டுமே!" என்றார்.
"ஏன் இவ்வளவு ஆடைகள் எடுத்து உள்ளீர்கள்?" எனக்கேட்டதற்கு அவர் "இது எனது சிறு வயது ஆசை. நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் சிறுவனாக இருக்கும் போது எனது நண்பர்களெல்லாம் தீபாவளிக்காக விதவிதமாக ஆடை உடுத்துவார்கள். எனக்கு தீபாவளிக்கு பலகாரமே கிடைக்காது. அப்படி இருந்தும் ஒரு முறை புத்தாடை கேட்டதற்கு விழுந்த அடியில் தீபாவளிக்கு பட்டாசே வெடிக்க முடியாமல் போய்விட்டது. அப்போது கிடைக்காத ஆடைகளுக்காக இப்போது நான் ஒவ்வொரு பண்டிகைக்கும் குறைந்தபட்சம் 10 ஆடைகளாவது எடுக்கிறேன்." என்றார்.
இளம் வயதில் நிராகரிக்கப்பட்ட ஏக்கம் இவருக்கு சுயமாகச் சம்பாதிக்கும் போது கிடைத்தது. ஆனால் இது அனைவருக்கும் வாய்ப்பதில்லை. இன்றும் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ தீபாவளிக்காக மட்டுமல்ல மற்ற நாட்களிலும் புத்தாடைகளுக்காக ஏங்கும் எத்தனையோ குழந்தைகளை நீங்கள் காணலாம்.
இன்று எங்கு பார்த்தாலும் ஆடைகளை வாங்கச் சொல்லி ஒரே விளம்பரம்தான். தொலைக்காட்சி, வானொலி, போகும் வழியெங்கும் சுவரில், ப்ளெக்ஸ் பேனரில், பேருந்தின் பின்னால் என எங்கும் விளம்பரமயம். அந்த துணிக்கடைகளில் ஆடைகள் வாங்காவிட்டால் நீங்கள் ஏதோ ஒரு குற்றம் செய்தது போல் மாயை உருவாக்கிவிட்டார்கள். அதுவும் குழந்தைகளை ஆடவிட்டு இளம் நெஞ்சுக்குள் அவர்களின் வியாபாரத்தை நஞ்சாய் விதைக்கிறார்கள்.
பள்ளி செல்லும் பிள்ளைகள் தீபாவளிக்கு மறுநாள் புத்தாடை அணிந்து வரலாம் என சொல்லுமளவிற்கு இவர்கள் மாற்றிவிட்டார்கள். தீபாவளி கொண்டாடாதவர்களானாலும் அவர்கள் குழந்தை பள்ளி செல்லுமென்றால் அவர்களும் புத்தாடை எடுத்துத் தரவேண்டும் என்றாகிவிட்டது.
சமீபத்தில் ஒரு டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தேன். அங்கு வேலை செய்யும் சிறுவன் சுவரில் தென்பட்ட ஒரு துணிக்கடையின் விளம்பரத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனிடம், "ஏன் அதையே பார்க்கிறாய்?" என்று கேட்டேன். அதற்கு அவன் "அண்ணா அந்த பான்ட் என்ன விலை இருக்கும்?" என்று ஒரு கார்கோ பான்ட்டைக் காட்டினான். நான் "ஒரு 500 ரூபாய் இருக்கும், எதற்கு கேட்கிறாய்?" என்றேன். "எனக்கு தீபாவளி போனஸ் கிடைக்கும். போனஸ் வந்தவுடனே அந்த கடைக்கு போய் நான் அதே பான்ட்டை வாங்கப் போறேன்" என்றான். அப்போது அவன் கண்ணில் தெரிந்தது ஆர்வமா, ஏக்கமா, நம்பிக்கையா என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.


